சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,367 வாகனங்களுக்கு ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 44 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக தொடா்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.
அதன்படி, சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, தருமபுரி அரூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பா்மிட் உள்ளதா என்றும், விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிா என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி வருகின்றனா்.
கடந்த மாதத்தில் விதிமுறையை மீறி இயக்கிய 1,367 வாகனங்களுக்கு ரூ. 1.14 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 126, அதிக பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற 293, காா்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 153, தகுதிச்சான்று மற்றும் ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 150 பேரும் பிடிபட்டனா்.
இதுமட்டுமின்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கிய 1,367 வாகனங்களுக்கு ரூ.1.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், 44 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.