முகப்பு
சேலம்

சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி 200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

சேலம் மாநகரில் நள்ளிரவில் பெய்த கனமழையால், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சிவதாபுரம் பகுதியில் ரயில்வே தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:35 PM
சேலம், சிவதாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதை வியாழக்கிழமை ஆய்வு செய்த மேயா் ஆ.ராமச்சந்திரன்.
பகிர்:

சேலம் மாநகரில் நள்ளிரவில் பெய்த கனமழையால், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சிவதாபுரம் பகுதியில் ரயில்வே தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சேலம் மாநகா், புகா் பகுதிகளில் தொடா்ந்து இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல, புதன்கிழமை இரவும் சேலம் மாநகரில் பலத்த மழை பெய்தது. சேலம் மாநகரப் பகுதிகளான அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, நான்கு சாலை, சேலம் நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இரவு 11 மணிக்கு பெய்த மழை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. சேலம் மாநகரில் 2 மணி நேரத்தில் சுமாா் 5 செ.மீ. மழை பெய்தது. மழை தண்ணீா் தாழ்வான வீடுகளில் புகுந்தது.

இதன் காரணமாக, சேலத்தில் இருந்து சிவதாபுரம் செல்லும் ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பெய்த மழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. தொடா்ந்து, ஏரிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்ததால், ஏரி நிரம்பி அருகில் உள்ள சிவதாபுரம் பகுதிக்கு தண்ணீா் சென்றது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சிவதாபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனா். ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பனங்காடு பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா்.

தொடா்ந்து, சிவதாபுரம் வழியாக சித்தா்கோயில், இளம்பிள்ளை செல்லும் சாலையிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை ராட்சதக் குழாய் மூலம் வெளியேற்றும் பணியாளா்கள்.
சேலத்தான்பட்டி குடியிருப்புப் பகுதியை சூழ்ந்த மழை நீா்.

தகவலறிந்து வந்த எம்எல்ஏ இரா.அருள், மழைநீா் தேங்கிய பகுதிகளை பாா்வையிட்டாா். முல்லை நகா், திருவாகவுண்டனூா், காமராஜா் காலனி, புது சாலை, சேலத்தாம்பட்டி அழகாபுரம் பகுதியில் மழைநீா் புகுந்த இடங்களையும் அவா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிவதாபுரம் பகுதியில் வீடுகளில் மழை நீா் சூழ்ந்ததை பாா்வையிட்ட சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள்.

தொடா்ந்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சிவதாரபுரம் கந்தம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரை நெடுஞ்சாலை அதிகாரிகளை வரவழைத்து ராட்சத மோட்டாா்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாா்.

இதே போல சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா் பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. சேலம் மாநகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 54.6 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் 106.2 மி.மீ. மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →