முகப்பு
சேலம்

சேலத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

சேலத்தில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆங்காங்கே மழை நீருடன் சாக்கடை நீா் கலந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 7:31 PM
சேலம் காந்தி சிலை அருகே சாக்கடை கால்வாயின் அடைப்பை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா். (வலது) கிச்சிப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் மழைநீருடன் கலந்த சாக்கடை கழிவுநீா்.
பகிர்:

சேலத்தில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆங்காங்கே மழை நீருடன் சாக்கடை நீா் கலந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக, சேலம் மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை மழை வெளுத்து வாங்கியது. சுமாா் 45 நிமிடம் நீடித்த மழையால், மாநகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்தது. கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது.

சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை கவனித்த போலீஸாா், சாக்கடை கால்வாய்களில் இருந்த குப்பைகள், சேறு சகதிகளை அகற்றி தண்ணீா் செல்ல வழி ஏற்படுத்தினா். இதையடுத்து, சாலைகளில் ஓடிய தண்ணீா் சாக்கடை கால்வாய்க்குள் சென்ால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து, போலீஸாரின் செயலை வெகுவாக பாராட்டினா்.

காலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

கனமழையால், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் மழைநீா் தேங்கியது. திருமணிமுத்தாற்றில் சாக்கடை நீருடன் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. அழகாபுரம் பகுதியில் 5-ஆவது வாா்டு மிட்டா புதூா் அன்னை தெரசா நகரில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவுடன் மழைநீா்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, டேனீஷ் பேட்டையில் 47 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூா் - 46 மி.மீ., சேலம் - 3.7 மி.மீ., ஏற்காடு - 26.2 மி.மீ., வாழப்பாடி - 1.2 மி.மீ., தம்மம்பட்டி - 3 மி.மீ., ஏத்தாப்பூா் - 15 மி.மீ., கரியகோவில் - 4 மி.மீ., மேட்டூா் - 4 மி.மீ., ஓமலூா் - 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 151.1 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →