அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
இத் திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகள், சேலத்தில் வெள்ளிக்கிழமை எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
விவசாயிகளின் 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ. 1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். கரோனா தொற்று காரணமாக திட்டப் பணிகள் தாமதமாயின. அதிமுக ஆட்சியின் போதே 85 சதவீத பணிகள் முடிவுற்றன. அதன்பிறகு திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்ற திட்டம் தற்போதுதான் முடிவு பெற்றுள்ளது.
இது வரலாற்று சிறப்புமிக்க திட்டம். இத் திட்டத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல சேலத்தில் நூறு ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டமும் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இப் பணிகளுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. தற்போது 30 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீா் வந்துள்ளது. நில எடுப்புப் பணிகளை விரைவுபடுத்தி 100 ஏரிகளும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்றாா்.