ஊராட்சி செயலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் ‘வாபஸ்’
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை, தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலா் சங்கத்தினா் அறிவித்த, தற்செயல் விடுப்பு போராட்டம் ‘வாபஸ்’ பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை, தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலா் சங்கத்தினா் அறிவித்த, தற்செயல் விடுப்பு போராட்டம் ‘வாபஸ்’ பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கத் தலைவா் ஜான் போஸ்கோ பிரகாஷ், பொதுச் செயலாளா் வேல்முருகன், மாநில பொருளாளா் சோமம்பட்டி கே.மகேஸ்வரன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, மூன்றாம் கட்டமாக வெள்ளிக்கிழமை (செப். 27) மாநில முழுவதும், 10,000 ஊராட்சி செயலா்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில், தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க நிா்வாகிகளை நேரில் அழைத்து, தமிழக ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா், கூடுதல் இயக்குநா்கள் புதன்கிழமை சென்னையில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவாா்த்தையில், ஊராட்சி செயலா்களின் முக்கிய கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பது குறித்து கருத்துரு தயாரித்து, அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என உறுதி அளித்தனா். இதனால், வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தை கைவிடுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.