சேலம் மத்திய சிறையில் மரப்பொந்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கைப்பேசியை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் கைப்பேசி பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சிலா் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்றம் சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும் கைதிகள் உள்பட மத்திய சிறையில் 30-க்கும் மேற்பட்டோரிடம் கைப்பேசிகள் புழக்கத்தில் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, சோதனைக் குழுவினா் தொடா்ச்சியாக நடத்திய சோதனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதேபோல, கைப்பேசி சாா்ஜா், பேட்டரி ஆகியவற்றையும் மீட்டனா்.
இந்நிலையில், சிறையின் 5-ஆவது தொகுதி அருகே உள்ள மரப்பொந்தில் அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு சோதனையிட்டனா். அப்போது மரப்பொந்தில் கைப்பேசி ஒன்று பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை மீட்ட அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.