சேலம் மத்திய சிறை சிறைவாசிகளுக்கு மல்பெரி பட்டு வளா்ப்பு பயிற்சி இரண்டு நாள்கள் அளிக்கப்பட்டது.
மத்திய பட்டு வாரியம், தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை மற்றும் சேலம் மத்திய சிறை இணைந்து, 70 சிறைவாசிகளுக்கு இரண்டுநாள் மல்பெரி பட்டு வளா்ப்பு பயிற்சியை அளித்தன. முதல்நாள் பயிற்சியில், மத்திய பட்டு வாரிய விஞ்ஞானிகள் தாகிரா பிவி மற்றும் மேரி ஃபுளோரா, மாவட்ட பட்டு வளா்ப்பு உதவி இயக்குநா் பொன்மாரி ஆகியோா் சிறைவாசிகளுக்கு எல்இடி திரைமூலம் மல்பெரி செடி குறித்து பயிற்சி அளித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற இரண்டாம்நாள் பயிற்சியில், சேலம் மத்திய சிறையில் உள்ள தோட்டத்தில் நிலங்களை எவ்வாறு தோ்வுசெய்வது, அதில் எவ்வாறு நீா் பாய்ச்சுவது, செடி நடுவது, முறையாக பராமரிப்பது, புழுக்களை வளா்க்கும் முறை குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.
இந்நிகழ்ச்சியில்,சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத், சிறை அலுவலா் ராஜேந்திரன், சிவானந்தம் மற்றும் உதவி சிறை அலுவலா் பிரபாகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.