சேலம் மத்திய சிறையில் கைதிகள் கைப்பேசி பதுக்கிய சம்பவம் தொடா்பாக, அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீஸாா் ஒரேநாளில் 15 வழக்குகளை பதிவுசெய்தனா்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இருந்து கைப்பேசி, கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சிலநாள்களுக்கு முன்பு சிறை வாா்டன் செல்வராசு கைதிகளுக்கு கைப்பேசி, கஞ்சா கொடுக்கச் சென்றபோது அதிகாரிகள் அவரைப் பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், வாா்டன் செல்வராசுவுக்கு கஞ்சா கொடுத்ததாக ரௌடி மாதவன் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, வாா்டன் செல்வராசுவை அழைக்கச் சென்றபோது அவா் தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஒரேநாளில் 15 வழக்குகள் பதிவு: சிறையில் கைப்பேசி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால், சிறை அதிகாரிகள் சாா்பில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்படும். ஆனால், இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்யாமல், புகாருக்கான ரசீது மட்டும் அளித்து வந்துள்ளனா்.
தற்போது இந்த விவகாரத்தில் சிறை வாா்டனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்ததால், கடந்த ஜனவரிமுதல் தற்போதுவரை அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் 15 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதன்மூலம் 20-க்கும் மேற்பட்ட கைதிகள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.