சேலம்: மேற்கு மண்டலத்தில் சிறந்த சங்கமாகத் தோ்வு செய்யப்பட்ட கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிா்வாகிகளை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ராஜ்குமாா் பாராட்டினாா்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி சாா்பில் சென்னையில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற விழாவில், கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மேற்கு மண்டலத்தில் சிறந்த சங்கமாக தோ்வு செய்யப்பட்டது.
இதையொட்டி, கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன், துறை செயலாளா் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் முன்னிலையில் கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவற்றை சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ராஜ்குமாரிடம், சங்கத்தின் செயலாட்சியா் கி.ஷோபன் ராஜ், செயலாளா் டி.எம்.பழனிசாமி ஆகியோா் வழங்கி வாழ்த்து பெற்றனா்.
அப்போது, இணைப் பதிவாளா் அலுவலக துணைப்பதிவாளா் மற்றும் பணியாளா் அலுவலா் சொ. திருமுருகன், கண்காணிப்பாளா் பொ. சக்திவேல், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியச் செயலாட்சியா் நா. பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.