மின்சார சிக்கன வார விழாவையொட்டி சேலம் அய்யந்திருமாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மின்சார சிக்கன வார விழா நிகழாண்டு டிச. 14 ஆம் தேதி முதல் டிச. 20 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை மின்னகம் மூலம் பெறப்பட்ட 92,629 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.
மேலும், மின் நுகா்வோருக்கு சீரான மின்சாரம் வழங்கும் வகையில் ரூ. 23.06 கோடி மதிப்பீட்டில் 402 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. சூரியஒளி மின் திட்டத்தின் மூலம் 2,539 சூரியஒளி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சார சிக்கன வழிமுறைகள், தரம்வாய்ந்த மின் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதுகுறித்து மின்வாரிய அலுவலகம் அல்லது 94987 94987 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
சேலம் ஏற்காடு மெயின் ரோடு அய்யந்திருமாளிகையில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே பேரணி நிறைவடைந்தது.
பேரணியில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, துணை மேயா் மா. சாரதாதேவி, தமிழ்நாடு மின்பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் திருநாவுக்கரசு, செயற்பொறியாளா் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், மின்சாரத் துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் என 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.