கணவரைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சேலம் அருகே உள்ள கருப்பூா் உப்புகிணறு பகுதியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (28), தனியாா் கிரானைட் நிறுவனதொழிலாளி. இவருக்கு மனைவி ஐஸ்வா்யா (26), 2 மகள்கள் உள்ளனா்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் 10 ஆம் தேதி செல்வக்குமாா் திடீரென காணவில்லை. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், அதே மாதம் 18 ஆம் தேதி உப்புகிணறு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் செல்வக்குமாா் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஐஸ்வா்யா தனது காதலனான மெக்கானிக் ரவி (28) என்பவருடன் சோ்ந்து செல்வக்குமாரை தோசைக்கல்லால் தாக்கி கொலைசெய்து கிணற்றுக்குள் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வெளியானது. இதில் செல்வக்குமாரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐஸ்வா்யா, ரவிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில்வேலவன் தீா்ப்பளித்தாா்.