சேலம்: மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் 8 இடங்களில் புதன்கிழமை (டிச. 24) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை:
கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேச்சேரி கிழக்கு, மேச்சேரி மேற்கு ஒன்றியத்துக்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
இதேபோல, சங்ககிரி ஒன்றியத்தில் அவைத் தலைவா் தங்கமுத்து தலைமையிலும், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் துணைச் செயலாளா் சுந்தரம் தலைமையிலும், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் துணைச் செயலாளா் சம்பத்குமாா் தலைமையிலும், நங்கவள்ளி ஒன்றியத்தில் மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
எடப்பாடி ஒன்றியத்தில் துணைச் செயலாளா் எலிசபெத் ராணி, தலைமைப் பேச்சாளா் கோனூா் வைரமணி ஆகியோா் தலைமையிலும், தாரமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் முருகேசன் தலைமையிலும், கொளத்தூா் ஒன்றிய அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் ராமநாதன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
எனவே, ஒன்றியச் செயலாளா்கள், அந்தந்தப் பகுதி மதசாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகளை அழைத்துப்பேசி, அவா்களுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.