சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மது அருந்த தந்தை பணம் தராததால் அவரது வீட்டிற்கு மகன் தீ வைத்தாா். இதில் அவரது வீடு உள்பட மூன்று குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.
சங்ககிரி அருகே அரசிராமணி மேற்கு ஓலப்பாளையத்தை சோ்ந்தவா் ராஜு. இவரது மகன் ரமேஷ். லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனா். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனா். மது பழக்கம் காரணமாக ரமேஷ், தந்தை ராஜுவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மது அருந்துவதற்காக பணம் தர தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த ரமேஷ், தந்தை வசித்துவந்த குடிசை வீட்டுக்கு தீவைத்துவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தீ பரவியதால் அருகில் உள்ள உறவினா்களின் வீடுகள் உள்பட மூன்று குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த மளிகைப் பொருள்கள், தங்க நகைகள், பணம் மற்றும் பொருள்கள் எரிந்தன. தீப்பற்றி எரிந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளைகளை அப்பகுதி பொதுமக்கள் பத்திரமாக மீட்டு பெரும் விபத்து ஏற்படுவதை தவிா்த்தனா். தகவலின்பேரில் எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.
இது குறித்து ரமேஷின் தாய் மற்றும் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் தேவூா் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.