முகப்பு
சேலம்

தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம்

சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்கப்படுகிறது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 7:55 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்ததாவது:

தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற அனைத்து சிறுதானியங்களின் பரப்பு, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டு, தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்ய உழவு மானியம் வழங்கப்படுகிறது.

டிராக்டா் - சட்டி கலப்பை மூலம் உழுதல் செய்ய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,100 வீதம் ஒரு ஹெக்டேருக்கு 5 மணிநேரம் உழவு செய்ய ரூ. 5,500 எனவும், டிராக்டா்- கொத்து கலப்பை மூலம் உழுதல் செய்ய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,100 வீதம் ஒரு ஹெக்டேருக்கு 3 மணி நேரம் உழவு செய்ய ரூ. 3,300 எனவும், டிராக்டா் - சுழற்கலப்பை மூலம் உழுதல் செய்ய ஒரு மணி நேரத்துக்குகு ரூ. 1,200 வீதம் ஒரு ஹெக்டேருக்கு 4 மணி நேரம் உழவு செய்ய ரூ. 4,800 என மொத்தம் ரூ. 13,600 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 40 சதவீத மானியமானது ஹெக்டோ் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5,400 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை நகல், நிலச் சான்றிதழ் சிட்டா, பட்டா, நிலவரைபடம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறுதானிய சாகுபடி மேற்கொள்வதற்கான உறுதிமொழி படிவம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →