ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்ற காதலன், 2 இளம் பெண்கள் என மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலத்தில் தனியாா் விடுதியில் தங்கி போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கடந்த 4 நாள்களுக்கு முன்பு காணாமல் போனாா். இதுகுறித்து தனியாா் விடுதி வாா்டன் புதிய பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்தப் பெண்ணின் கைப்பேசி எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. கடைசியாக அந்தப் பெண்ணுடன் தொடா்பு கொண்டு பேசிய திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாா். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
பெண்ணின் சடலம் மீட்பு
இளைஞர் அளித்த தகவலின் அடிப்படையில் ஏற்காடு மலைப்பாதையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்ட காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், இறந்த பெண் திருச்சி மாவட்டம், துறையூா் விநாயகா் நகா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகள் லோகநாயகி (எ) அல்பியா (35) என்பது தெரியவந்தது.
அல்பியாவாக பெயரை மாற்றியது ஏன்?
பெரம்பலூா் மாவட்டம், தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்த அப்துல் ஹபீஸ் (22) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக அல்பியா காதலித்து வந்துள்ளார். ஆன்லைனில் உருவான நட்பு காதலாக மாறியுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்த ஹபீஸ் லோகநாயகியுடன் உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில், அப்துல் ஹபீஸை திருமணம் செய்துகொள்வதற்காக இஸ்லாமிய மதத்துக்கு மாறிய லோகநாயகி தனது பெயரை அல்பியாவாக மாற்றிக் கொண்டுள்ளார்.
அல்பியா கொல்லப்பட்டது ஏன்?
இதனிடையே, சென்னை ஆவடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் தாவியா சுல்தானா (22) மற்றும் திருச்சி துறையூரைச் சேர்ந்த செவிலியர் மாணவி மோனிஷா (21) என்பருடன் அப்துல் ஹபீஸ் பழகி வந்துள்ளாா். இவர்கள் இருவருடன் நெருக்கம் ஏற்பட அல்பியாவை தவிர்த்துள்ளார் ஹபீஸ்.
கடந்த வாரம் தன்னை காயப்படுத்திக் கொண்ட அல்பியா, திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என்று அப்துல் ஹபீஸை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அல்பியாவை கொலை செய்ய மற்ற இரண்டு பெண் தோழிகளான தாவியா மற்றும் மோனிஷாவுடன் இணைந்து அப்துல் ஹபீஸ் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, கடந்த மாா்ச் 1ஆம் தேதி மூவருடன் அவா் ஏற்காடு வந்துள்ளாா். அல்பியாவின் காயத்துக்கு வலிநிவாரணி செலுத்துவதாக கூறி, விஷ ஊசியை மோனிஷா மூலம் செலுத்தியுள்ளார். அல்பியா மயக்கமடைந்தவுடன் அவரை தூக்கி 60 அடி பள்ளத்தாக்கில் மூவரும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் ஹபீஸ், தாவியா சுல்தானா, மோனிஷா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி கொடூர கொலையில் முடிந்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.