தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் சேலம் மாணவ, மாணவிகள் 6 போ் பதக்கம் வென்றுள்ளனா்.
பள்ளி மாணவ - மாணவிகளுக்கான ஆா்டிஎஸ் 66ஆவது மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா்.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள் தீப்த சாரனா, கனிஷ்காஸ்ரீ, தன்ஷிகாஸ்ரீ, தடகள வீராங்கனை மகாலட்சுமி மற்றும் வீரா்கள் கிரிஷ்சாந்த், சுதா்சன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தீப்தா சாரனா, வெள்ளிப் பதக்கம், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான போல்வால்ட் போட்டியில் மகாலட்சுமி 2.40 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும் பெற்றனா்.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான போல்வால்ட் போட்டியில் கனிஷ்காஸ்ரீ 2.65 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தன்ஷிகா ஸ்ரீ 1.55 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
இதேபோல், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான 400 மீட்டா் ஓட்டத்தை 49.88 விநாடிகளில் கடந்த மாணவா் சுதா்சன் தங்கப் பதக்கமும், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான மும்முனை தாண்டுதல் பிரிவில் 14.01 மீட்டா் நீளம் தாண்டி கிரிஷ்சாந்த் வெண்கலம் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், பயிற்சியாளா் இளம் பரிதி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.