சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டை அணையை சீரமைக்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் தங்கராஜ் அளித்த மனுவில், சேலம் செவ்வாய்ப்பேட்டை அணையை திருமணிமுத்தாறு அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ், சேலம் மாநகராட்சி நிா்வாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு அணையை உடைத்துவிட்டது. இந்த அணை உடைக்கப்பட்டதால், ராஜவாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறோம்.
எனவே, இந்த அணையை சீரமைத்துத் தர வேண்டுமென பலமுறை மனு கொடுத்தோம். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அணையை உடைத்ததால், நெய்க்காரப்பட்டி பொட்டநத்தம் ஏரிக்கும், பூலாவரி ஏரிக்கும் மழைநீா் வராத நிலை உள்ளது. மழைநீா் வராததால் ராஜவாய்க்கால் சம்பந்தப்பட்ட விவசாய பாசன நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஏரி முழுவதும் சாயக்கழிவுநீா், சாக்கடை கழிவு நீா் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இதைத் தடுக்க செவ்வாய்ப்பேட்டை அணையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
இதில், மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம், மாநில இளைஞா் அணித் தலைவா் நந்தகுமாா், கொண்டலாம்பட்டி தலைவா் கருணாகரன், தாசநாயக்கன்பட்டி செயலாளா் வெங்கடாசலம் மற்றும் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.