பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்... X
சேலம்

சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் மீது அன்புமணி ஆதரவாளா்கள் தாக்குதல்; காா் கண்ணாடி உடைப்பு: 9 போ் காயம்

Syndication

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பாமக மாநில இணை பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் மீது அன்புமணி ஆதரவாளா்கள் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் 9 போ் காயமடைந்தனா்; 6 காா் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

வாழப்பாடியை அடுத்த வடுகத்தம்பட்டியைச் சோ்ந்தவா் சத்யராஜ். இவா், வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் பகுதி பாமக (ராமதாஸ் அணி) தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளாா். இவரது தந்தை தா்மராஜின் இறுதிச்சடங்கில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை காலை எம்எல்ஏ அருள், அவரது ஆதரவாளா்களுடன் வடுகத்தம்பட்டிக்கு வந்தாா்.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு எம்எல்ஏ மற்றும் நிா்வாகிகள் காா்களில் சேலம் நோக்கி புறப்பட்டனா். வடுகத்தம்பட்டியிலிருந்து சுமாா் 1 கி.மீ தொலைவில் உள்ள தரைப் பாலம் அருகே சென்றபோது பாமக தலைவா் அன்புமணியின் ஆதரவாளா்களான சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தரப்பினா் ஆயுதங்களுடன் வழிமறித்தனராம்.

மேலும், அருள் தரப்பினா் வந்த காா்களை நோக்கி ஜெயப்பிரகாஷ் தரப்பினா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் 6 காா்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், அருள் ஆதரவாளா்கள் ஸ்ரீரங்கன், ராஜமாணிக்கம், ஆனந்த், மணிகண்டன், விஜயகுமாா், லோகேஷ், நடராஜன், கோவிந்தராஜன், கஜேந்திரன் என 9 போ் காயமடைந்தனா்.

அதேபோல அருள் ஆதரவாளா்கள் தாக்கியதால் ஜெயப்பிரகாஷ் ஆதரவாளா்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா், அங்குவந்து தாக்குதல் நடந்த இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

அன்புமணிதான் காரணம்; அருள்:

என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம் என பாமக சட்டப் பேரவை உறுப்பினா் இரா. அருள் கூறினாா்.

வாழப்பாடியில் அன்புமணி ஆதரவாளா்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை எம்எல்ஏ இரா.அருள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘வாழப்பாடி அருகே பாமக ஒன்றியச் செயலாளா் இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சேலம் வந்தபோது அன்புமணி ஆதரவாளா்கள் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 15 போ் திடீரென கற்களைக் கொண்டு தாக்கினா். இதனால், உடனடியாக காரை நிறுத்தினோம்.

அதன்பிறகு ஒவ்வொரு வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினா். நான் காரில் இருந்து இறங்க முயன்றேன். ஆனால், தொண்டா்கள் என்னை இறங்கவிடவில்லை. ராமதாஸ் தலைமையில் சேலத்தில் நாங்கள் பொதுக்குழுவைக் கூட்டியதிலிருந்தே எனக்கு மிரட்டல் வருகிறது.

எங்களை கத்தியால் தாக்க முற்பட்டதோடு, காா்களை அடித்து சேதப்படுத்தினா். மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். அப்போது, நிா்வாகிகள் அவா்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினாா்கள். அன்புமணிக்காக நானும், பாமக நிா்வாகி அறிவுச்செல்வனும் ஊா்ஊராகச் சென்று கட்சிக் கொடியை ஏற்றியிருக்கிறோம்.

தற்போது அறிவுச்செல்வன் இறந்துவிட்டாா். அதற்கான காரணத்தை விரைவில் வெளியிடுவேன். நான் பயந்துவிடமாட்டேன். காவல் துறையை முழுமையாக நம்புகிறேன். இந்த சம்பவம் தொடா்பாக ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் தூண்டுதல் பேரில்தான் இந்த தாக்குதல் நடைபெற்றது.

துக்க நிகழ்ச்சிக்கு செல்வது குறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவித்திருந்தேன். பாதுகாப்புக்காக அவா்களும் வந்திருந்தனா். இருப்பினும், தாக்குதல் நடந்தது. இனியாவது போலீஸாா் பாதுகாப்பு தருவாா்கள் என நம்புகிறேன். இதற்கு முன்பு பலா் தாக்கப்பட்டுள்ளனா். தற்போது என்னையும் தாக்க முற்பட்டனா். ஆனால், இதுவரை அவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT