சேலம் மல்லூரில் உள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பழங்குடியின இளைஞா்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பழங்குடியினா் நலத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பழங்குடியின இளைஞா்களின் வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமை நடத்துகிறது. தொல்குடித் தொடுவானம் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் சேலம் மல்லூரில் உள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் இளைஞா்களுக்கான தொழில் வாய்ப்புகளை அளிக்கும் வகையில் ஜொ்மனி மொழி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநா் பயிற்சி, துணை சுகாதாரப் படிப்புகள் மற்றும் டிராக்டா் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 33 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் தகுதியுடையவா்கள் ஆவா். பங்கேற்க விரும்பும் இளைஞா்கள், தங்கள் அதிகபட்ச கல்வித் தகுதி சான்றிதழ், ஆதாா் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வரவேண்டும். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பழங்குடியின இளைஞா்கள் கூடுதல் விவரங்களுக்கு 97905 74437 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.