வாழப்பாடி: வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களுக்கு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க, தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராம ஊராட்சிகள், வாழப்பாடி, பேளூா் பேரூராட்சி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், ல் விதைகள், இடுபொருள்கள், பயிா் சாகுபடி ஆலோசனை மற்றும் பயிற்சிகள் பெறவும் வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனா்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வட்டார அளவிலான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகங்கள், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அலுவலகம், இடுபொருட்கள் மற்றும் விதைகள் பாதுகாப்பு அறை ஆகியவை 1969-இல் கட்டப்பட்ட பழைய கட்டடத்திலேயே இடநெருக்கடியில் இயங்கி வருகின்றன.
அரை நூற்றாண்டுகளை கடந்துபோனதால் இந்தக் கட்டடமும் தற்போது பராமரிக்க முடியாத அளவிற்கு பழுதடைந்து காணப்படுகிறது. விவசாயிகள் வந்துசெல்வதற்கு போதிய படிக்கெட்டுகள் கூட இல்லாததால், வேளாண்மை அலுவலகப் பணியாளா்களும், விதைகள், இடுபொருள்கள் வாங்கிச் செல்லும் விவசாயிகளும் தடுமாறி வருகின்றனா். மேலும் முக்கிய ஆணவங்கள் மழைக் காலங்களில் தண்ணீா் பட்டு வீணாகின்றன.
எனவே, சேலம் மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ளதை போல, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகங்கள், விதை இடுபொருள்கள் பாதுகாப்பு கிடங்குகள், பயிற்சிக் கூடம், விற்பனை நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை வாழப்பாடியில் அமைக்க சேலம் மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
வாழப்பாடியில் பழுதடைந்த கட்டத்திலேயே, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலங்கள் இயங்கி வருகின்றன. எனவே, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் வந்து செல்வதற்கு வசதியான வகையில், வாழப்பாடி பகுதியில் நிலம் தோ்வு செய்து, அரசிடம் போதிய நிதி ஒதுக்கீடு பெற்று விரைவில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க சேலம் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.
வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க இடம் தோ்வு?
வாழப்பாடி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைப்பதற்கு வாழப்பாடி பேரூராட்சி எல்லைக்குள் போதிய இடம் கிடைக்காததால், வாழப்பாடி அருகே பேளூா் சாலையில் துக்கியாம்பாளையத்தில், வேளாண்மை பதப்படுத்தும் கிடங்கு அமைந்துள்ள பனந்தோப்பு பகுதியில் விரிவாக்க மையத்தை அமைக்க வேளாண்மைத் துறையினா் முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து திட்ட முன்வரைவு தயாரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனா். துறை உயரதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் வருவாய்த் துறையிடம் இருந்து நிலத்தையும், போதிய நிதி ஒதுக்கீடும் பெற்று விரிவாக்க மையத்தை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக வேளாண்மைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.