சேலம்: பால் உற்பத்தியாளா்களுக்கான நிலையான நிரந்தர வருவாயை அரசு உறுதிசெய்யும் என பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் கூறினாா்.
தேசிய பால் தினத்தை முன்னிட்டு, சேலம் புக்கம்பட்டி தொகுப்பு பால் குளிா்விப்பு நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கிவைத்த அமைச்சா் மனோ தங்கராஜ், பாலின் தரத்தை உறுதிசெய்யும் நிகழிட ஒப்புகைச்சீட்டு முறையை ஆய்வு செய்தாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பாலின் தரம், கொள்முதல் அளவிற்கேற்ப விவசாயிகளுக்கு பணம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தியதன் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு நியாயமான விலை கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பால் கொள்முதலுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் செலுத்தப்படுகிறது.
பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கம் மூலம் 75 சதவீத மானியத்தில் 146 பசுக்களுக்கு காப்பீடு, ஊக்கத்தொகை மற்றும் கறவை மாடு பராமரிப்புக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுப்பு பால் குளிா்விப்பான் மையம் மூலம் 43 லட்சம் லிட்டா் பால் குளிா்விக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மாவட்டத்தில் சராசரி பால் கொள்முதல் நாளொன்றுக்கு 3,800 லிட்டராக உள்ளது. காப்பீடு செய்யப்பட்ட பசுக்கள் இறந்தால் உறுப்பினா்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. பால்வளத் துறை சாா்பில் இளைஞா்கள் சுயதொழில், வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 4 சதவீத வட்டி மானியத்துடன் 5,000 சிறுபால் பண்ணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதிக அளவில் பால் உற்பத்திசெய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கால்நடை வாங்குவதற்கான கடனுதவி, வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடனுதவி என ரூ.1,250 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் தொடா்ந்து திறம்பட செயல்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு பாலுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. ஆவினில் கொள்முதல் செய்யப்படும் பால் மற்றும் தீவனத்தை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளா்களுக்கு நிலையான நிரந்தர வருவாய் கிடைப்பதை அரசு உறுதிசெய்யும் என்றாா்.
நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், பால்வளத் துறை ஆணையா் அ.ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், ஆவின் பொது மேலாளா் ப.குமரேஸ்வரன், கூட்டுறவுச் சங்க தலைவா் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் கலந்துகொண்டனா்.