அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள், கால்நடை வளா்ப்போா், பால் பண்ணைத் துறையினரின் நலனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது; அவா்களை முழுமையாகப் பாதுகாக்கும் அளவுக்கே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்தாா்.
வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகள் இடையே கூட்டறிக்கையும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா்.
இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டாா். இந்தியாவுக்கு 500 பில்லியன் டாலா் பொருள்களை விற்க இருப்பதாகவும் அவா் கூறியிருந்தாா். இதனால், அமெரிக்க உணவுப் பொருள்கள், பால் பொருள்களுக்கு இந்தியச் சந்தை திறந்துவிடப்பட வாய்ப்புள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
அமெரிக்க வேளாண் பொருள்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருப்பதாக அந்த நாட்டின் வேளாண் துறை அமைச்சா் புரூக் லெஸ்லி ரோலின்ஸும் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கோயல் விளக்கமளித்தாா். அப்போது, ‘இரு நாட்டு மக்களுக்கும் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டதாக வா்த்தக ஒப்பந்தம் இருக்கும். முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் பாதுகாக்கப்படும். முக்கியமாக நமது வேளாண் துறை, பால் உற்பத்தித் துறை முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
ஆயத்த ஆடை, பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு, ரத்தினங்கள், நகைத் தொழில், வீட்டு உள்அலங்காரம், தோல், காலணி, உயிரி ரசாயனங்கள், ரப்பா் பொருள்கள், இயந்திரங்கள், விமான உற்பத்தி உள்பட அதிக வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அமெரிக்கா இப்போது விதிக்கும் 50 சதவீத வரி என்பது 18 சதவீதமாகக் குறைந்துவிடும். இந்தியாவுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும். இதன்மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வளா்ச்சி மேலும் வேகம் பெறும். இந்தியாவின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் அமெரிக்காவுடன் மிகச்சிறந்த ஒப்பந்தத்தையே மேற்கொண்டுள்ளோம். வா்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதன் நிறைவில் இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.