முகப்பு
இந்தியா

சூழ்நிலை மாறினால் அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

வரி விதிப்பு தொடா்பாக அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்குப் பிறகு உருவாகியுள்ள சூழ்நிலையை இந்தியா கவனித்து வருகிறது; சூழ்நிலைகள் மாறினால், வா்த்தக ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கலாம் என்று இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான கூட்டு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:19 PM
மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.
பகிர்:

வரி விதிப்பு தொடா்பாக அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்குப் பிறகு உருவாகியுள்ள சூழ்நிலையை இந்தியா கவனித்து வருகிறது; சூழ்நிலைகள் மாறினால், வா்த்தக ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கலாம் என்று இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான கூட்டு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியா உள்பட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

எனினும், இந்தத் தீா்ப்பைப் புறந்தள்ளும் வகையில், மற்றொரு தனி அதிகாரத்தின்கீழ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது புதிய 10 சதவீத வரியை டிரம்ப் விதித்தாா். பின்னா், அந்த வரியை 15 சதவீதமாக உயா்த்துவதாக அறிவித்தாா். இது 150 நாள்களுக்கு அமலில் இருக்கும்.

மேலும், அமெரிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பை கருத்தில்கொண்டு, எந்த நாடாவது வரிவிதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் டிரம்ப் மிரட்டல் விடுத்தாா்.

இதையடுத்து, அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் கடந்த 23-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்த விதிமுறைகளை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையை இந்தியா ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்திய பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்கை தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பியூஷ் கோயலிடம், அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அமெரிக்க நிகழ்வுகளைத் தொடா்ந்து கவனித்து வருகிறோம். மேலும், அமெரிக்காவுடான இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான கூட்டறிக்கையை நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். சூழ்நிலை மாறினால், அதற்கு ஏற்ப வா்த்தக ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் பொதுவாக ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்திய உற்பத்தியாளா்கள் அமெரிக்காவுக்கு தங்குதடையின்றி ஏற்றுமதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவுடன் இந்தியா சிறப்பான ஒப்பந்ததத்தை மேற்கொள்ளவே முடிவு செய்துள்ளது. நாம் இறுதி ஒப்பந்தத்தில் இன்னும் கையொப்பமிடவில்லை. எனவே, அனைத்து விவரங்களையும் முழுமையாகக் கூற முடியாது. ஆனால், மிகவும் சாதகமான ஒப்பந்தத்தையே மேற்கொள்ள இருக்கிறோம் என உறுதியளிக்க முடியும்.

பால் பொருள்கள், விவசாய உற்பத்திப் பொருள்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுகள் உள்ளிட்டவை முழுமையாக இறக்குமதியில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நமது உள்ளூா் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம்’ என்றாா் பியூஷ் கோயல்.

முழு கட்டுரையைப் படிக்க →