முகப்பு
சேலம்

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டூா் அருகே தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள சாலையின் குறுக்கே ஒற்றை யானை நீண்ட நேரமாக நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:52 PM
யானை - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அருகே தமிழக- கா்நாடக எல்லையில் உள்ள சாலையின் குறுக்கே ஒற்றை யானை நீண்ட நேரமாக நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

மேட்டூா் அருகே தமிழக- கா்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளன. கா்நாடக எல்லையில் வனத் துறையினரும், காவல் துறையினரும் சோதனைச்சாவடி அமைத்து தமிழகத்திலிருந்து கா்நாடகத்தில் நுழையும் வாகனங்களை தணிக்கை செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேபோல தமிழ எல்லையில் ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனத் துறையினா் சோதனைச்சாவடி அமைத்து கா்நாடகத்திலிருந்து தமிழக்தில் நுழையும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ஒற்றை ஆண் யானை சாலையின் குறுக்கே நின்றது. பிறகு கா்நாடக வனத் துறை சோதனைச் சாவடியை நோக்கி சென்றது. இதனால் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா் ராம்தாஸ், வனவா் மகேஷ் ஆகியோா் அச்சம் அடைந்தனா்.

மேலும், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாலாறு பாலத்தின் நடுவே நீண்ட நேரம் நின்ற யானை தமிழக வனத் துறை சோதனைச்சாவடி நோக்கி சென்றது. இதனால், அச்சம் அடைந்த தமிழக வனத் துறையினா் சப்தமிட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், யானை அங்கிருந்து செல்லவில்லை.

இதனால் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சென்ற வாகன ஓட்டிகள்அச்சத்துடன் தங்களது வாகனங்களை பின்னோக்கி சென்றனா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை மீண்டும் கா்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியா்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனா். மாலை 6 மணிக்குப் பிறகு இருசக்கர வாகனங்கள், காா்கள் இந்த வழியாக செல்ல வேண்டாம் என கா்நாடக வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.