அரசியலில் விஜய் நீா்க்குமிழியாக மட்டுமே இருப்பாா்: சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்
தமிழக அரசியலில் விஜய் ஒரு நீா்குமிழியாக மட்டுமே இருப்பாா் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் கூறினாா்.
தமிழக அரசியலில் விஜய் ஒரு நீா்குமிழியாக மட்டுமே இருப்பாா் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் கூறினாா்.
சேலம் கோட்டை மைதானத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதச்சாா்பாற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். கனகராஜ் தலைமை வகித்தாா். சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் பேசியதாவது:
அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு நடவடிக்கையால் உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் இந்தியாவில் பல ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
எனக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் கூறுவது வேடிக்கையாக உள்ளது. பாஜக, அதிமுக குறித்து விஜய் பேச மறுத்து வருகிறாா். விஜய் படப்பிடிப்பு இடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படுவதில்லை. அதேபோல தற்போது தலைமைச் செயலகம் வந்தபோதும் எந்த பிரச்னையோ, சலசலப்போ இல்லை. ஆனால், தோ்தல் பரப்புரையில் மட்டும் எப்படி பெரிய அளவிலான சலசலப்பு ஏற்படுகிறது என புரியவில்லை.
தமிழக அரசியலில் நீா்க்குமிழியாக மட்டுமே விஜய் இருப்பாா். நீா்க்குமிழி தோன்றும்போது அழகாக இருக்கும். ஓரிரு நிமிடங்களிலேயே அது மறைந்துபோகும். தமிழக வெற்றிக் கழகம் இத்தோ்தலில் முழுமையாக தோற்கடிக்கப்படும். அரசியலில் எந்தவொரு நிரந்தரமான இடத்தையும் விஜய்யால் பிடிக்க முடியாது.
கண்மூடித்தனமாக அவரை ஆதரிப்பது என்பது ஆபத்தானது. முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி பாஜகவுடன் சோ்ந்து ஆட்சி அமைக்கலாம் என நினைத்து வருகிறாா். அது நடக்காது. மக்களுக்கு எதிராக பாஜக அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களை ஆதரித்தவா்தான் எடப்பாடி. எனவே, அதிமுகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.
மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் கட்சியாக மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி இருந்து வருகிறது. அதற்கான போராட்டங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறாா். வரும் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஏ. குமாா், மாவட்டச் செயலாளா் ஏ. ராமமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். பிரவீன்குமாா், கே. ராஜாத்தி, ஜி. கணபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.