FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

மாற்றமும் தடுமாற்றமும்!

ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசு தனது அமைச்சரவையை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Updated On : 23 மே 2026, 9:48 pm IST
CM Vijay
பகிர்:

ஒருபுறம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு; இன்னொரு புறம்

எத்தனையோ தடைகள்; இத்தனைக்கும் இடையில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசு தனது அமைச்சரவையை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலா ஓர் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் 21 பேரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய்யுடன் 9 பேர் பதவியேற்றனர் என்றால், தற்போது மேலும் 25 பேர் அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டப்படி, தமிழக சட்டப்பேரவையின் எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள்தான் நியமிக்க முடியும். அந்த எண்ணிக்கையை ஜோசப் விஜய் அரசு அடைந்திருப்பதால், இனிமேல் புதிதாக அமைச்சர்களை இணைத்துக்கொள்ள முடியாது.

Advertisement

Advertisement

இனிமேல், திமுக அல்லது அதிமுகவில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இணைவதாக இருந்தாலும், அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க இயலாது என்கிற செய்தியை முதல்வர் அழுத்தமாகவே தெரிவித்திருக்கிறார். அப்படியே சமரசம் செய்வதாக இருந்தால் இப்போதிருக்கும் அமைச்சர்கள் சிலரை விலக்கிக் கொண்டாக வேண்டும்.

இதுவரையில் இல்லாத அளவில் அமைச்சரவையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 8 பேரை முதல்வர் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுவரையில் இல்லாத அளவில் நான்கு பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலித்துகள், மகளிர் வாக்கு வங்கியை நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்ள முனைந்திருப்பது, அவரது அரசியல் சாதுர்யத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் தலித்துகள் மட்டுமல்லாமல் கூடுமானவரை எல்லாப் பிரிவினரையும் திருப்திப்படுத்த முயற்சி எடுத்திருப்பது தெரிகிறது. தேர்தலில் போட்டியாளர்களை நிறுத்தும்போது ஜாதி, மதம், கல்வித் தகுதி எதையும் பார்க்காமல் இருந்தாலும், அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை முதல்வர் ஜோசப் விஜய் உணர்ந்திருக்கக்கூடும்.

கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பரிந்துரைக்கப்படும் அமைச்சர்கள் முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர் என்பது கூட்டணி ஆட்சியின் பலவீனம். ஆனால், இப்போது அமைந்திருக்கும் தவெக கூட்டணி அரசில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இணைந்திருக்கும் உறுப்பினர்களேகூட முதல்வரால், அவரவர் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

அதிமுகவில் இருந்து தேர்தலுக்கு முன்பு தவெகவில் இணைந்த அமைச்சர் செங்கோட்டையனைத் தவிர, அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அனைவரும் முதல்வர் உள்பட ஆட்சி நிர்வாகத்துக்குப் புதியவர்கள், முதன்முறை சட்டப்பேரவை உறுப்பினர்கள். ஒரு சிலரைத் தவிர ஏனைய தவெக உறுப்பினர்கள் அனுபவசாலிகள் இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை. 1967-இல் சி.என். அண்ணாதுரையும், 1977-இல் எம்.ஜி.ஆரும்கூட இதேபோன்ற தர்மசங்கடத்தை எதிர்கொண்டனர் என்றாலும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் புதியவர்களால் கட்டமைக்கப்படவில்லை.

1967-இல், அமைச்சரவையில் இடம்பெற்ற சி.என். அண்ணாதுரை, வி.ஆர். நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன், ஏ.கோவிந்தசாமி, எஸ். மாதவன், எஸ்.ஜே.சாதிக் பாட்சா, பாவலர் முத்துசாமி, சத்தியவாணி முத்து ஆகிய ஒன்பது அமைச்சர்களில் சாதிக் பாட்சாவைத் தவிர ஏனைய எட்டு பேருமே அதற்கு முன்பு சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த அனுபவசாலிகள்.

1977-இல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபோது பொன்னையன், முத்துசாமி, அரங்கநாயகம், காளிமுத்து, குழந்தைவேலு, ராஜா முகம்மது, ஆர். செளந்தரராஜன், பி.டி.சரஸ்வதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர். எம்.வீரப்பன் உள்ளிட்ட புதியவர்கள் பலரை அமைச்சர்களாக அறிமுகப்படுத்தினார் என்றாலும், அவரது அமைச்சரவையில் அனுபவசாலிகள் பலரும் இடம் பெற்றிருந்தனர். நாஞ்சில் மனோகரன், கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜி.ஆர். எட்மண்டு, ராகவானந்தம் உள்ளிட்டவர்கள் முக்கியத் துறைகளின் அமைச்சர்களானார்கள்.

இப்போது முதல்வர் ஜோசப் விஜய்க்குத் தனது அமைச்சரவையில் முன்அனுபவசாலிகளை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. அமைச்சர்கள் செங்கோட்டையனுக்கு வருவாய்த் துறை, அருண்ராஜுக்கு மக்கள் நல்வாழ்வு, அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம், வெங்கடரமணனுக்கு உணவு, ராஜ்மோகனுக்குப் பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,

பெ. விஸ்வநாதனுக்கு உயர் கல்வி என்று ஒரு சிலருக்குத் திறமை அடிப்படையில் துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஏனைய அமைச்சர்களுக்கான துறைகள் என்ன அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பது புரியவில்லை.

அமைச்சர்களில் 16 பேர் ரசிகர்களாக இருந்து, அதனடிப்படையில் வேட்பாளர்களாகி வெற்றி பெற்றவர்கள்; புதியவர்கள். அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது, இவர்களில் எத்தனைப்பேர் தரப்பட்டிருக்கும் பொறுப்புக்கு ஏற்ப தங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பது தெரியும்.

ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள்தான் என்பதால் மாற்றம் தெரிகிறது. துறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால்தான் சற்று தடுமாற்றம் தெரிகிறது. எல்லோரும் இளைஞர்கள் என்பதால், தங்களை நிரூபிக்கத் துடிப்பார்கள் என்கிற அளவில் நம்பிக்கை துளிர்க்கிறது!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சுஆணி அன்னார் உடைத்து.

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.

திருக்குறள் (எண் 667) அதிகாரம்: வினைத்திட்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments