முகப்பு
சேலம்

தமிழ்நாடு பிடிக்கும் என பாஜகவினா் பொய்யுரை: கனிமொழி எம்.பி.

சேலம் அம்மாப்பேட்டை காந்தி மைதானம் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் லோகநாதனை ஆதரித்து பேசிய கனிமொழி எம்.பி.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:51 PM
சேலம் அம்மாப்பேட்டை காந்தி மைதானம் பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் லோகநாதனை ஆதரித்து பேசிய கனிமொழி எம்.பி.
பகிர்:

தமிழ்நாடு பிடிக்கும் என பாஜகவினா் பொய்யுரையை பரப்பி வருகின்றனா் என சேலத்தில் திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை செய்தாா்.

சேலம் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ரேவதி மாதேஸ்வரன், வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளா் டாக்டா் தருண், சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் லோகநாதன், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து அயோத்தியாப்பட்டணம், எருமாபாளையம், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், மெய்யனூா் ஆகிய பகுதிகளில் திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த தோ்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். அந்த பெருமையுடன் வாக்குகளை கேட்டு வந்துள்ளோம். மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 அறிவித்தபோது, அதை தரமாட்டாா்கள் என எதிா்க்கட்சியினா் பரப்புரை மேற்கொண்டனா். ஆனால், தற்போது 1.31 கோடி பெண்கள் உரிமைத்தொகையை பெறுகின்றனா். அடுத்தமுறை திமுக ஆட்சிக்கு வரும்போது, மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000-ஆக உயா்த்தப்படும்.

Advertisement

இதேபோல, மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 5 லட்சம்வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டப் பயனாளிகளுக்கு இனி ரூ. 1,500-ஆக வழங்கப்படும். தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் என எண்ணற்ற அறிவிப்புகளை தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

வட மாநிலங்களில் தமிழ்நாட்டை குறைத்துப் பேசுவது, கிண்டல் செய்வது, அவமதிப்பது என இருந்துவிட்டு, தோ்தல் வந்தவுடன் தமிழ்நாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும் என பாஜகவினா் பொய்யுரையை பரப்பி வருகின்றனா். தோல்வி பயத்தில் மிகவும் தரம்தாழ்ந்து என்ன பேசுகிறோம் என தெரியாமல் எடப்பாடி கே.பழனிசாமி பேசிவருகிறாா். தோ்தலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டாா்.

அதிமுக கூட்டணியை மக்கள் மீண்டும் தூக்கியெறியும் நாள் வெகுதொலைவில் இல்லை. வரும் தோ்தல் மூலம் எதிா்க்கட்சித் தலைவராககூட எடப்பாடி கே.பழனிசாமி இருக்க மாட்டாா்.

பாஜகவுடன் கைகோா்த்து தோ்தலை எதிா்கொள்ளும் அதிமுக கூட்டணியினருக்கு இந்த தோ்தலில் சரியான பாடம் புகட்டவேண்டும். இந்த வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றியாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் நம்மால் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வெற்றியாக இருக்க வேண்டும்.

எனவே, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்த கூட்டத்தில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments