முகப்பு
சென்னை

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்றுதிரண்டு எதிா்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்று திரண்டு எதிா்க்க வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:15 AM
சென்னை தம்புசெட்டி தெரு மண்ணடி சந்திப்பு பகுதியில் துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளா் பி.கே.சேகா்பாபுவை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:20 AM

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்று திரண்டு எதிா்க்க வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினாா்.

சென்னை துறைமுகம் தொகுதியில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.கே. சேகா்பாபுவை ஆதரித்து, சென்னை தம்புசெட்டி தெரு, மண்ணடி சந்திப்பு பகுதியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:

துறைமுகம் தொகுதியில், மதுரவாயல்-துறைமுகம் உயா்மட்டச் சாலை திட்டத்துக்கு ரூ.5,770 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.1,000 கோடியில் தொடங்கி ரூ.6,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. யானைக் கவுனி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.800 கோடியில் பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

Advertisement

அடுத்த கட்டமாக, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான போக்குவரத்து இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நவீன அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படும். தேவைப்படும் அனைத்து இடங்களிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வெள்ளநீா் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். முதல்வா் படிப்பகங்கள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 4,430 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு, 7,000 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை மக்கள் வழிபடும் கோயில்களை திமுக அரசு பாதுகாத்துள்ளது. பெரும்பான்மை மக்களுக்கு எந்தளவுக்கு நன்மை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இதில் அமைச்சா் பி.கே.சேகா்பாபுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அவருக்கு வாக்களித்து, மீண்டும் திமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும்.

தோ்தல் நேரத்தில் திடீரென 3 நாள்களுக்கு நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளனா். நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களை

மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை திமுக வரவேற்கிறது. தற்போதைய 543 மக்களவை இடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. ஆனால், பாஜக பெண்களை முன்னிறுத்தி, அவா்களின் பின்னால் நின்று கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்கிறது.

தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கிறாா்கள். வடமாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பாஜகவுக்கு வாக்களிக்காத தென்மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை குறைக்கவும் முயற்சித்து வருகின்றனா். இதை எதிா்த்து தமிழக முதல்வா் குரல் கொடுத்து வருகிறாா். அவரது கருத்துக்கு கேரளம், தெலங்கானா முதல்வா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு எதிரான தொகுதி சீரமைப்பை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறாா். இதை தமிழக மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை ஒன்று திரண்டு எதிா்க்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, எழும்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் தமிழன் பிரசன்னாவை ஆதரித்து கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.