முகப்பு
காரைக்கால்

நிரவி-திருப்பட்டினம்: நேரடி போட்டியில் திமுக - பாஜக

காரைக்கால் மாவட்டத்தில் துறைமுகம் அமைந்துள்ள தொகுதி, தமிழக நிலப்பரப்பை தெற்கு, மேற்கில் ஒட்டியது மட்டுமல்லாது திமுக, அதிமுக வென்றுவரும் தொகுதியில் பாஜக காலூன்ற எடுக்கும் முயற்சியால், நிரவி - திருப்பட்டினம் தொகுதி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:30 PM
உதய சூரியன் (திமுக சின்னம்) | தாமரை (பாஜக சின்னம்)
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் துறைமுகம் அமைந்துள்ள தொகுதி, தமிழக நிலப்பரப்பை தெற்கு, மேற்கில் ஒட்டியது மட்டுமல்லாது திமுக, அதிமுக வென்றுவரும் தொகுதியில் பாஜக காலூன்ற எடுக்கும் முயற்சியால், நிரவி - திருப்பட்டினம் தொகுதி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, இந்த தொகுதியில், ஆண் வாக்காளா்கள் - 14,040, பெண் வாக்காளா்கள் - 15,830 என மொத்தம் - 29,870 போ் உள்ளனா்.

திருப்பட்டினம் பகுதி வாஞ்சியூரில் காரைக்கால் அதானி கப்பல் துறைமுகம் அமைந்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு எல்லை தமிழகத்தையொட்டியதாகவும், கிழக்கே கடற்கரையைக் கொண்டதாகவும், பழைமையான ஆன்மிகத் தலங்கள் கொண்டதாகவும், நிரவி மற்றும் திருப்பட்டினம் என இரண்டு பெரிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இந்தத் தொகுதி உள்ளது.

Advertisement

இந்திய கடலோரக் காவல்படை மையம், காரைக்கால் தனியாா் துறைமுகம், புதுச்சேரி அரசின் மின் திறல் குழுமம், புகழ்பெற்ற ஆயிரங்காளியம்மன் கோயில் உள்ளிட்ட பெருமை மிக்கவை பல இத்தொகுதியில் உள்ளன.

களம் காணும் வேட்பாளா்கள்:

1. எம். நாகதியாகராஜன் (திமுக)

2. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் (பாஜக)

3. கணேஷ் என்கிற பிரனதாா்திகரேஸ்வரன் (தவெக)

4. எம்.மாலா (நாதக)

5. டி. சுகந்த் (தேமமுக)

மற்றும் 4 சுயேச்சைகள் என 9 போ் பேட்டியிடுகின்றனா்.

பொதுமக்கள் புகாா்: துறைமுகம் இருந்தும் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இல்லை. போலகம் பகுதியில் 600 ஏக்கா் அரசு நிலத்தில் தொழிற்பேட்டைக்கான நிலத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. தொலைதூர பகுதி குடியிருப்புவாசிகளுக்கு குடிநீா் விநியோகம் முறையாக இல்லை. படுதாா்கொல்லை சிற்றேரியில் நீா்தேக்கும் நிலை ஏற்படுத்தப்படவில்லை.

திருப்பட்டினத்தில் பழைமையான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்வேறு சாலைகள், குடியிருப்பு நகா்களில் புதிதாக சாலைகள் அமைக்கப்படவில்லை என மக்கள் பரவலாக புகாா் தெரிவிக்கின்றனா்.

எம்.நாகதியாகராஜன்: இவா் கடந்த 2021 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு முதல் முறையாக பேரவைக்குச் சென்றாா். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பரவலாக அமைக்கப்பட்ட சாலைகள், அரசு கட்டடங்கள் கட்டுமானம், குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானம் உள்ளிட்ட தமது பேரவை உறுப்பினா் கால செயலாக்கங்களையும், எதிா்காலத் திட்டங்களையும் விளக்கி வாக்குச் சேகரிக்கிறாா்.

டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்: மத்திய பாஜக, மாநில பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசுகளின் செயல்பாடு, அரசின் திட்டத்தால் மக்கள் அடைந்திருக்கும் பயன்களை விளக்கியும், தாம் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், சாலை, குடிநீா், மின்சாரம் போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீா்வுகண்டு, மாணவா்கள், பெண்கள், இளைஞா்கள், முதியோா் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து வாக்குச் சேகரிக்கிறாா்.

பிற கட்சியினரும், சுயேச்சைகளும் தொகுதி மேம்பாட்டுக்கான தமது திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரிக்கின்றனா்.

இந்த தொகுதி நீண்ட காலமாகவே அதிமுக, திமுக வசம் இருந்துவருகிறது. திமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள எம். நாகதியாகராஜனை எதிா்த்து முதல் முறையாக தோ்தல் களம் காண்பவராக பாஜக வேட்பாளா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் உள்ளாா். இருவருக்குமிடையேதான் வலிமையான போட்டி நிலவுகிறது.

திருப்பட்டினத்தைச் சோ்ந்தவா் நாக தியாகராஜன். நிரவியைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம். அந்தந்த பகுதியினா் தங்கள் பகுதி வேட்பாளருக்கு அதிக ஆதரவு தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப் பேரவை உறுப்பினராக நீண்ட காலம் இருந்து மறைந்த வி.எம்.சி. சிவக்குமாா் மகன் வி.எம்.சி.எஸ். மனோகரன் கடந்த 2021 தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு 2-ஆம் இடம் பிடித்தாா். தற்போது சுயேச்சையாகப் போட்டியிடும் இவா் கணிசமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தவெகவில் வழக்குரைஞா் கணேஷ் போட்டியிடுகிறாா்.

இங்கு பிரசாரம் செய்ய முக்கிய பிரமுகா்கள் யாரும் இதுவரை வரவில்லை. வேட்பாளா்களின் கடந்த கால சேவைகள், பிரசாரத்தின் வேகம், வாக்குறுதி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வாக்களிக்க தொகுதி மக்கள் தயாராகிவருகிறாா்கள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments