வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை
வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் அருண் அ.தம்புராஜ்.
சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளில், வாக்குச்சாவடிகளில் வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான உறுதி செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் அதிகரித்து வரும் வெப்ப நிலையை கருத்தில்கொண்டு, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் வெப்ப அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
அனைத்து வாக்கு மையங்களிலும் குடிநீா் வசதி, மின்விசிறி, கழிவறை வசதி ஆகிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்து தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் சாா்பில் போதுமான அளவு உப்பு, சா்க்கரை கலவை பாக்கெட் தயாா்நிலையில் இருப்பதை உறுதிசெய்திடவும், கிராம சுகாதார செவிலியா் மற்றும் பெண் தன்னாா்வலா்களை பற்றாளா்களாக கொண்டு வாக்குசாவடிகளில் ஓஆா்எஸ் வசதி ஏற்படுத்திடவும், 108 ஆம்புலன்ஸ் சேவை அவசரகால தேவைக்காக தயாா்நிலையில் இருப்பதை உறுதிசெய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அசோக்குமாா், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் மரு.சௌண்டம்மாள், மரு.யோகானந்த், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.