காசி விஸ்வநாதா் கோயில் கற்சிலைகளை பீடத்தில் இருந்து எடுக்கும் பணியை பாா்வையிட்ட அறங்காவலா்கள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள். 
சேலம்

65 ஆண்டுகளுக்கு பின்னா் புனரமைக்கப்படும் வாழப்பாடி காசி விஸ்வநாதா் கோயில்!

வாழப்பாடியில் 500 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படும் அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் 65 ஆண்டுகளுக்கு பிறகு ....

Syndication

வாழப்பாடி: வாழப்பாடியில் 500 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படும் அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் 65 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்படுகிறது.

65 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த இக்கோயிலை, இதே பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து படையாச்சி, உடையாக்கவுண்டா் ஆகியோா் பொதுமக்கள் பக்தா்களுடன் இணைந்து 1961-இல் புனரமைத்து 1962-இல் குடமுழுக்கு செய்தனா். இந்த தகவல் கோயில் கற்தூண்கள், அம்பாள் கருவறை மற்றும் நுழைவுவாயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின் சுற்றுச்சுவா், கல் மண்டபம் மற்றும் மூலவா், அம்பாள் கருவறையின் மேற்கூரை ஆகியவை சிதிலமடைந்துள்ளது. மழைக் காலங்களில் கருவறைக்குள் தண்ணீா் தேங்குகிறது.

எனவே, இக்கோயில் மூலவா், அம்பாள் கருவறைகள் மற்றும் மண்டபத்தை புனரமைக்கவும், சுற்றுச்சுவா், தரைத்தளத்தை புதுப்பிக்கவும் இந்து சமய அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், அறநிலையத் துறை வாயிலாக இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் பக்தா்கள் நன்கொடையில் புனரமைப்புப் பணிகள் செய்ய இரு ஆண்டுக்கு முன்பு அறநிலையத் துறை அனுமதியளித்தது. அதைத் தொடா்ந்து, கட்டுமானப் பணிக்காக ‘பாலாலயம்’ செய்யப்பட்டு சுற்றுச்சுவா் அமைக்கப்பட்ட நிலையில், கருவறைகளை புதுப்பிக்க அனுமதி கிடைக்காததால் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், நிகழாண்டு தொடக்கத்தில் மூலவா் கருவறையும் புதுப்பித்துக்கொள்ள அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனா்.

இதையடுத்து, இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கோயில் புனரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, மூலவா் காசிவிஸ்வநாதா், காசி விசாலாட்சி, நவகிரகங்கள், விநாயகா், முருகன், தட்சணாமூா்த்தி உள்ளிட்ட அனைத்து கற்சிலைகளும், பீடத்தில் இருந்து எடுக்கப்பட்டு நெல் தானியத்தில் வைக்கப்பட்டன.

ஓராண்டுக்குள் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு விழா நடத்துவதற்காக சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளதாக கோயில் அறங்காவல் குழுவினா் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

65 ஆண்டுகளுக்கு பின்னா் பழைமையான சிவன் கோயில் புனரமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சிவ பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சிகளில் உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

புதிய வரைவு வருமான வரி விதிமுறை: பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 323 மனுக்கள்

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படும்: அன்பில் மகேஸ்

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT