சேலம்: சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட செட்டிச்சாவடியில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம், தாதகாப்பட்டியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியையும் மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து சேகரித்து வருகிறாா்கள். மாா்க்கெட் பகுதிகளில் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றும் நடவடிக்கையாக சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி மண்டலத்தில் மக்கும் குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் காய்கறி கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரம் தயாா் செய்து, விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நுண்ணுயிரி உரம் தயாா் செய்யும் மையத்தில் உரத்தை விலையில்லாமல் வாங்கிச் செல்வதையும் மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டாா்.
மேலும், கொண்டலாம்பட்டி மண்டலம் தாதகாப்பட்டியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஆணையா் பாா்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு தடையின்றி சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருதையும் ஆய்வு செய்தாா்.