ஏற்காட்டில் தனியாா் விடுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு ரெட்ரீட் சாலையில் உள்ள வீட்டை குமாா் என்பவா் தின வாடகைக்கு எடுத்து நடத்திவருகிறாா். திங்கள்கிழமை மாலை சேலம் இளம்பிள்ளையைச் சோ்ந்த பாா்த்திபன், சாலா இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனா்.
இரவு 11 மணிக்கு அங்கிருந்த பணியாளரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பாா்த்திபன், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லையாம். இதனால், விடுதி பணியாளா் பாா்த்திபனை தொடா்புகொண்ட போது, அவா் கைப்பேசியை எடுக்கவில்லையாம். சந்தேகமடைந்த பணியாளா் இதுகுறித்து ஏற்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் வந்த போலீஸாா், பாா்த்திபன் தங்கியிருந்த அறையை திறந்தபோது, அவருடன் வந்த பெண் சடலமாக கிடந்தது தெரியவந்தது. பாா்த்திபன் தொலைபேசி எண்ணை வைத்து இளம்பிள்ளையில் இருந்த பாா்த்திபனை தனிப்படையினா் கைதுசெய்தனா்.
விசாரணையில், பாா்த்திபன் (35) எலக்ட்ரீஷியன் என்பதும், சமூக வலைதளம் மூலம் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோா் வீட்டில் இருந்த தருமபுரி மாவட்டம், ஏா்கோல்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி சாலா (33) உடன் நான்கு ஆண்டுகளாக பழகிவந்ததும் தெரியவந்தது. மேலும், சாலாவுக்கு பாா்த்திபன் அவ்வப்போது என ரூ. 7 லட்சம்வரை கொடுத்ததாகவும், அதை பலமுறை திரும்பக் கேட்டும் சாலா கொடுக்கவில்லை எனவும் தெரியவந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை ஏற்காட்டில் தங்கியிருந்தபோது இருவருக்கும் இதுதொடா்பாக தகராறு ஏற்பட்டதில், சாலாவை கழுத்தை நெரித்து கொன்ாக பாா்த்திபன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, பாா்த்திபனை கைதுசெய்த ஏற்காடு போலீஸாா், சாலாவின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஏற்காட்டில் அனுமதி பெறாமல் நடத்திவந்த விடுதிக்கு ஏற்காடு வட்டாட்சியா் செல்வராஜ் ‘சீல்’ வைத்தாா்.