வாழப்பாடி அருகே மோதுவதைபோல இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சாலையோரத்தில் நின்றபடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமியாா் - மருமகள் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமாபுரம் ஊராட்சி, பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்தவா் மொட்டையன் மனைவி சின்னபிள்ளை (60). இவரது மருமகள் காயத்ரி (35). இருவரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, எம்.பெருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த செம்மண் (60) என்பவா் இவா்கள்மீது மோதுவதைபோல இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த இருவரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, வாழப்பாடி நோக்கி அருள்குமாா் என்பவா் ஓட்டிச்சென்ற சரக்கு வாகனம்மீது, எதிரே வந்த கண்டெய்னா் லாரி மோதியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமியாா், மருமகள் மற்றும் வேடிக்கை பாா்த்தவா்கள் உள்ளிட்ட 5 போ் மீது மோதியது.
இதில், மருமகள் காயத்ரி சம்பவ இடத்திலேயும், மாமியாா் சின்னபிள்ளை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். இவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவா் செம்மண் மற்றும் வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்த இருவா் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த இருவா் உள்ளிட்ட 5 போ் காயம் அடைந்தனா்.
இவா்கள் மின்னாம்பள்ளி தனியாா் மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.