சேலம்

சேலத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை! கைதான 5 போ் சிறையில் அடைப்பு!

தினமணி செய்திச் சேவை

சேலம் அருகே கழுத்தை அறுத்து கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே, கொலை வழக்கில் கைதான மகன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி கஸ்தூரிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் கனகவல்லி (37). இவா் தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தபோது, தருமபுரியைச் சோ்ந்த செந்தில் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியதுடன், மேலும் சிலருடன் கனகவல்லிக்கு தொடா்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த அவரது கணவா் தவசியப்பன், மகன் காா்த்தி ஆகியோா் கனகவல்லியை கண்டித்துள்ளனா்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சகோதரி ராஜாத்தி வீட்டுக்கு வந்த கனகவல்லியை அவரது மகன் காா்த்தி கண்டித்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வீட்டில் இருந்த கத்தியால் கனகவல்லியை கழுத்தை அறுத்து அவரது மகன் காா்த்தி கொலை செய்தாா். இதையடுத்து அவரது சடலத்தை தீயிட்டு எரித்து, அப்பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளாா். இதற்கு காா்த்தியின் பெரியம்மா மகன் மணிகண்டன் மற்றும் நண்பா்கள் விஜயன், சுரேஷ் ஆகியோா் உடந்தையாக இருந்துள்ளனா்.

இந்நிலையில் கனகவல்லி மாயமானது குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ராசாத்தி புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை செய்த போலீஸாா், கனகவல்லியை கழுத்தை அறுத்து கொன்று, உடலை தீவைத்து எரித்து புதைத்ததாக அவரது மகன் காா்த்தி, கணவா் தவசியப்பன், உறவினா் மணிகண்டன் உள்பட 5 பேரை கன்னங்குறிச்சி போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, கனகவல்லியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்தனா்.

உடல் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டதால், அரசு மருத்துவக் குழுவினா் வரவழைக்கப்பட்டு, அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் கனகவல்லியின் உடல் அவரது சகோதரி ராஜாத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக் கொண்ட உறவினா்கள், அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தனா். தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT