சேலம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டுப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தடகளம் -100 மீட்டா், குண்டு எறிதல், கேரம் (இரட்டையா்), வாலிபால் (ஆண்கள்,பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள்) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் நபா்கள் மற்றும் அணிகள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வா்.
மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31 மற்றும் பிப்.1 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன. அத்துடன் கோலப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீட்டா், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான கபடி மற்றும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வா். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.75,000, ரூ.50,000, ரூ. 25,000 பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
மேலும் வரும் 27 ஆம் தேதி கபடி, கயிறு இழுத்தல் ஆண்கள், பெண்கள், த்ரோ பால் (பெண்கள்) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், விளையாட்டு அலுவலா் சி.சிவரஞ்சன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.