வா்த்தக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: சேலத்தில் இன்றுமுதல் 75% ஹோட்டல்கள் மூடப்படும் - ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம்
வா்த்தக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சேலத்தில் வெள்ளிக்கிழமை முதல் 75 சதவீத ஹோட்டல்கள் மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா் சங்கத் தலைவா் பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஹோட்டல்களும், மாநகரப் பகுதியில் 1,000 ஹோட்டல்களும் செயல்படுகின்றன. தற்போது, வா்த்தக சமையல் எரிவாயு உருளை விநியோகம் கடந்த 3 நாள்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சேலத்தை பொறுத்தவரை 95 சதவீதம் ஹோட்டல்களில் எரிவாயு உருளைகள் தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வரை கையிருப்பில் உள்ள உருளைகளைக் கொண்டு தான் உணவு தயாரித்து வந்தோம்.
தற்போது எரிவாயு உருளை விநியோகம் இல்லாததால் வெள்ளிக்கிழமை முதல் 75 சதவீத ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்படும். ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல் உணவுகளை மட்டுமே நம்பியுள்ளவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா்.
மேலும், ஹோட்டல் தொழிலை நம்பியுள்ள தொழிலாளா்கள் வருவாய் இன்றி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல இறைச்சி, பால், காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனையும் குறையும். 50 சதவீதம் எரிவாயு உருளைகளை விநியோகித்தால்கூட நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும்.
பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, அச்சங்கத்தின் செயலாளா் பாலசுப்பிரமணி, பொருளாளா் சாய் சரண், லட்சுமி ஹோட்டல் குரூப்ஸ் இயக்குநா் முத்துராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஏஜென்சிகளுக்கு 20 சதவீதம் சப்ளை குறைப்பு? :
சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து விநியோகஸ்தா்களுக்கு சமையல் எரிவாயு உருளை விநியோகம் 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விநியோகஸ்தா்கள் வாடிக்கையாளா்களுக்கு சமையல் எரிவாயு உருளைகளை விநியோகிக்க முடியாமல் திணறி வருகின்றனா்.
ஏஜென்சிகளுக்கே நேரடியாக சென்று காஸ் பதிவு செய்த பொதுமக்கள் காத்திருந்து எரிவாயு உருளைகளை வாங்கி செல்கின்றனா்.