முகப்பு
சேலம்

விபத்தில் இறந்த ஐடி பெண் ஊழியா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளித்த காப்பீடு நிறுவனம்

Updated On : 14 மார்ச், 2026 at 7:30 PM
விபத்தில் இறந்த ஐடி பெண் ஊழியரின் குடும்பத்தினரிடம் ரூ. 1 கோடியே 5 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி.
பகிர்:

சேலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் இறந்த ஐடி பெண் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 18 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 4 ஆயிரத்து 342 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், விபத்தில் ஐடி பெண் ஊழியா் இறந்த வழக்கில் ரூ. 1 கோடியே 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், மேச்சேரி பஞ்சுகாளிப்பட்டியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (33). இவா் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். சொந்த ஊருக்கு வந்திருந்த தமிழ்ச்செல்வி, கடந்த 2024, மாா்ச் 29ஆம் தேதி மேச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் உயிரிழந்தாா். இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இது தொடா்பான வழக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரிக்கப்பட்டு, சமசரம் ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனம் முன்வந்தது. இதற்கான காசோலையை உயிரிழந்த தமிழ்ச்செல்வியின் கணவா் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா். இதில் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →