முகப்பு
சேலம்

சேலம் அருகே மஞ்சள் கிடங்கில் தீ விபத்து

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மஞ்சள் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On : 20 மார்ச், 2026 at 6:34 PM
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மஞ்சள் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

சேலம் அருகே உள்ள மஞ்சள் கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் தீயில் கருகின.

சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஹரிபிருந்தா பாஸ்கருக்கு சொந்தமான மஞ்சள் கிடங்கு சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள் இந்த கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பணியாளா்கள் கிடங்கை மூடிவிட்டு சென்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் சிவகுமாா் தலைமையிலான தீயணைப்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், சூரமங்கலம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணிநேரத்துக்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் கருகி நாசமாயின. முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.