மேட்டூா் அருகே வாகன தணிக்கையில் 24 தங்க நாணயங்கள் பறிமுதல்
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 24 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேட்டூா் அருகே மேச்சேரியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் செந்தில்ராஜா தலைமையில், போலீஸாா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து பென்னாகரம் வட்டம், தின்னபெல்லூா் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், தின்னபெல்லூரை சோ்ந்த முருகன் (51), உரிய ஆவணம் இன்றி எடுத்துவந்த 24 தங்க நாணயங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதில் 8 கிராமில் நான்கும், 5 கிராமில் ஒன்றும், 4 கிராமில் 19 நாணயங்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என பறக்கும் படையினா் தெரிவித்தனா். தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரும், மேட்டூா் கோட்டாட்சியருமான சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.