முகப்பு
சேலம்

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பரிசுப் பொருள்கள் விநியோகம்: தவெக மாவட்டச் செயலாளா் மீது வழக்குப் பதிவு

Updated On : 23 மார்ச், 2026 at 6:35 PM
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பரிசுப் பொருள்கள் விநியோகித்ததாக, தவெக மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கும்வகையில், மாநிலம் முழுவதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. முன்னதாக, கடந்த 20-ஆம் தேதி இரவு சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 52-ஆவது வாா்டு சண்முகா நகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தவெக சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தனது ஆதரவாளா்களுடன் தொழுகையில் ஈடுபட்டாா். பின்னா், தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்ததுடன் அனைவருக்கும் பரிசுப் பொருள்களை வழங்கினாா். இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகளைமீறி இஸ்லாமியா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கிய தவெகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மத்திய மாவட்ட திமுக பொருளாளா் வழக்குரைஞா் காா்த்திகேயன், சேலம் தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இளங்கோவனிடம் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து சேலம் தெற்கு தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தமிழ்வேந்தன் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், தவெக சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.