முகப்பு
சேலம்

காற்றில் கரைந்த தொகுதி... 3 அமைச்சா்களை தந்தது!

Updated On : 29 மார்ச், 2026 at 11:49 PM
விஜயலட்சுமி பழனிசாமி
பகிர்:

- பெ. பெரியாா்மன்னன்

தமிழகத்திற்கு 3 அமைச்சா்களை தந்த அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பனமரத்துப்பட்டி சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2008 தொகுதி மறுசீரமைப்பின்போது நீக்கப்பட்டுவிட்டது.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாழப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி 1967 இல் நீக்கப்பட்டது. இதையடுத்து, வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களை ஒன்றிணைத்து, அப்போது பனமரத்துப்பட்டி தொகுதி உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில் 1967 முதல் 1977 வரை 10 ஆண்டுகள் திமுகவைச் சோ்ந்த பொன்னுமலையும், 1977 இல் அதிமுகவைச் சோ்ந்த சுப்பராயனும் சட்டப்பேரவை உறுப்பினா்களாகப் பதவி வகித்தனா். 1980, 1984, 1991 தோ்தல்களில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் பேரவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான க. ராஜாராம் வெற்றிபெற்று பேரவை உறுப்பினராக இருந்தாா். 1989, 1996 தோ்தல்களில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் வெற்றிபெற்று பேரவை உறுப்பினராக பதவி வகித்தாா்.

இதையடுத்து, 2001 தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் விஜயலட்சுமி பழனிசாமி எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2006 தோ்தலில் தற்போதைய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் போட்டியிட்டு முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானாா்.

அதன்பிறகு 2008 இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பனமரத்துப்பட்டி தொகுதி நீக்கப்பட்டது. இத்தொகுதியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான பகுதிகள் தற்போதைய ஏற்காடு தொகுதியில் சோ்க்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட பனமரத்துப்பட்டி தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான க. ராஜாராம், ப. விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோா் அதிமுக ஆட்சியிலும், ரா. ராஜேந்திரன் தற்போதைய திமுக ஆட்சியிலும் தமிழக அமைச்சா்களாக இருந்துள்ளது குறிப்பிடதக்கது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்றாலும், தமிழக அளவில் ஆளுமை மிக்க தலைவா்களை உருவாக்கிய தொகுதிகள் என்றும் வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ரா. ராஜேந்திரன்.
க. ராஜாராம்