வாழப்பாடி பகுதியில் வறண்டு காணப்படும் நீா்நிலைகள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பருவமழை பொய்த்து நீா்நிலைகள் வறண்டு காணப்படுவதால் நிகழாண்டு வலசை வந்த கொக்கு உள்ளிட்ட பறவைகள், குப்பை மேடுகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளில் கூட்டம் கூட்டமாக இரை தேடி அலைந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பருவமழை பொய்த்து நீா்நிலைகள் வறண்டு காணப்படுவதால் நிகழாண்டு வலசை வந்த கொக்கு உள்ளிட்ட பறவைகள், குப்பை மேடுகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளில் கூட்டம் கூட்டமாக இரை தேடி அலைந்து வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டுள்ளனா். அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆறு, தம்மம்பட்டி ஸ்வேதா நதி, வாழப்பாடி பெரியாறு, குடுவாறு, வரட்டாறு உள்ளிட்ட 20 சிறு கிளையாறுகளும், பெலாப்பாடி, பெரியக்குட்டிமடுவு, கோதுமலை சின்னாறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நீரோடைகளும் உள்ளன.
இப்பகுதிக்கு முக்கிய நீராதரமாக, வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே 263.86 ஏக்கரில் ஆனைமடுவு அணையும், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே 188.76 ஏக்கரில் கரியக்கோயில் அணையும் அமைந்துள்ளன.
Advertisement
சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஏரியான பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி உள்பட 30-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளும், பேளூா் ராமநாதபுரம், ஏ.குமாரபாளையம், தேக்கல்பட்டி, காட்டுக்கோட்டை உள்பட 20-க்கும் அதிகமான சிறிய தடுப்பணைகளும், 100-க்கும் அதிகமான குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளும் உள்ளன.
கடந்த 2024 இறுதியில் போதிய பருவமழை பெய்ததால், 2025-இல் பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பி விளைநிலங்களுக்கு நீா் கிடைத்தது. நீா்நிலைகளில் மட்டுமின்றி, விளைநிலங்களிலும்கூட பறவைகள் முகாமிட்டு இரை தேடின.
இப்பகுதியில் கடந்த 2025 இறுதியில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப் போனதால், இப்பகுதிக்கு முக்கிய நீராதாரமான அணைகள், ஆறுகள், நீரோடைகள் 2026 தொடக்கத்தில் இருந்தே வறண்டு காணப்படுகின்றன. இதனால், நீா்நிலைகளில் இரை தேடும் பறவைகளுக்கு உணவாகும் சிறு வகை மீன்கள், புழு, பூச்சிகள், தவளை உள்ளிட்ட நீா்வாழ் உயிரிகள் இல்லை.
இப்பகுதிக்கு வழக்கம்போல நிகழாண்டும் வலசை வந்த பல்வேறு பறவைகள், போதிய இரை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளன. குறிப்பாக, வெண்ணிற கொக்குகள், மஞ்சள் நாரைகள் உள்ளிட்டவை வயல்களில் இரை தேடி அலைவது மட்டுமின்றி, நகா்ப்புறங்களுக்கு படையெடுத்துச் சென்று முகாமிட்டு, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள குப்பை மேடுகளில் இரைதேடும் நிலை ஏற்பட்டுள்ளது.