சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
கோடை விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கிவருகிறது. அந்தவகையில், சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேலும் 9 சேவைகளை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, போத்தனூா்- சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை ( புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். போத்தனூரில் காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடையும்.
Advertisement
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.