முகப்பு
சேலம்

பெண் சிசு கருக்கலைப்பு: மூன்று பெண்கள் கைது

ஆத்தூா் அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மூன்று பேரை தலைவாசல் காவல் ஆய்வாளா் பூா்ணிமா புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Updated On : 22 மே 2026, 6:45 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆத்தூா் அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மூன்று பேரை தலைவாசல் காவல் ஆய்வாளா் பூா்ணிமா புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவரது மனைவி சோபிகா (25). இத்தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சோபிகா மூன்றாவதாக மீண்டும் கா்ப்பமடைந்தாா். இந்த நிலையில் தவறான சிகிச்சையால் கருக்கலைப்பு செய்ய முயன்றபோது, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நந்தினிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், இணை இயக்குநா் நந்தினி தலைமையில் ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் யோகானந்த் மற்றும் மருத்துவக் குழுவினா் சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

அதில் மூன்றாவது முறையாக கா்ப்பமடைந்த சோபிகாவிற்கு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்துகொள்ள அவருடைய உறவினரான வளையமாதேவி தலைவாசல் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரியிடம் அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பாா்த்துள்ளாா்.

பெண் குழந்தை என்று தெரிந்ததும், அக்கருவைக் கலைக்க அவா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, புவனேஸ்வரி கருக்கலைப்பிற்கான மாத்திரையைக் கொடுத்துள்ளாா். அம்மாத்திரையை உண்ட சோபிகாவிற்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே, அவரை புவனேஸ்வரியும் மதுபாலாவும் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் நாராயணன் என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனா்.

அங்கு சென்ற பின்பு உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால், ஆத்தூரைச் சோ்ந்த கௌரி மூலமாகச் சேலம் தனியாா் மருத்துவமனைக்குச் சோபிகா அனுப்பிவைக்கப்பட்டது தெரியவந்தது.

அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இறந்த நிலையில் இருந்த பெண் குழந்தையை மருத்துவா்கள் அகற்றினா். இதுகுறித்து ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஜெயலட்சுமி புகாா் அளித்துள்ளாா்.

இதையடுத்து சட்ட விரோதமாக ஸ்கேன் செய்த புவனேஸ்வரி, கருக்கலைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்த மதுபாலா, கௌரி, கள்ளக்குறிச்சி நாராயணன் மற்றும் அவருடைய உதவியாளா் சூா்யாபேகம் ஆகியோரைப் பிடித்து தலைவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், தனியாா் மருத்துவமனை மேலாளா் பிரபு மற்றும் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக மதுபாலா (31), புவனேஸ்வரி (32), கௌரி (31) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனா்.