முகப்பு
மதுரை

மானாமதுரை வழியே கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

மானாமதுரை அக். 20:   ஒரு சமயத்தில் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டபோது எப்போதும் பரபரப்பாகக் காட்சியளித்த மானாமதுரை ரயில் நிலையம் தற்போது ஒருசில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், வெறிச்சோடிக் காணப்படுகிற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:12 PM
பகிர்:

மானாமதுரை அக். 20:   ஒரு சமயத்தில் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டபோது எப்போதும் பரபரப்பாகக் காட்சியளித்த மானாமதுரை ரயில் நிலையம் தற்போது ஒருசில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், வெறிச்சோடிக் காணப்படுகிறது.

  மானாமதுரை ரயில் நிலையம் முக்கியச் சந்திப்பாகும். இந்த வழித்தடம் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது, ஒரு நாளைக்கு குறைந்தது 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மானாமதுரை வழியாகச் சென்று திரும்பின.

  மானாமதுரை வழியாக சென்னை, ராமேசுவரம், தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கும், நாகூரிலிருந்து கொல்லத்துக்கும் மானாமதுரையிலிருந்து கோயமுத்தூர், பாலக்காடு, திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய நகரங்களுக்கும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டன.

Advertisement

  இந்த ரயில்களில் தென் மாவட்ட ரயில்கள் மானாமதுரை அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இயக்கப்பட்டபோது சென்னை சென்று திரும்பும் தென் மாவட்ட மக்கள் பயண நேரம் குறைவு என்பதால், மானாமதுரை வழியாகச் செல்லும் ரயில்களை மட்டுமே விரும்பினர்.

  இதனால் எப்போதும் மானாமதுரை ரயில் நிலையம் பரபரப்பாகக் காணப்படும். இந்த ரயில் நிலையம் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வந்தது.

  இவ்வாறு பரபரப்போடு காணப்பட்ட மானாமதுரை ரயில்வே சந்திப்பு தற்போது எந்தவிதப் பரபரப்புமின்றி காணப்படுகிறது.

  இதற்கு, மீட்டர்கேஜ் பாதைகள் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின்னர் மானாமதுரை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படாததே காரணம்.

  தற்போது மானாமதுரை வழியாக ராமேசுவரம்- சென்னை- ராமேசுவரம்-மதுரை, மானாமதுரை- திருச்சி ராமேசுவரம்- ஓகா ஆகிய இடங்களுக்கு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

  இவற்றில் ராமேஸ்வரம்-ஓகா ரயில் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது மானாமதுரை ரயில் நிலையத்திலுள்ள குட்ஸ்ஷெட்டிலிருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அரிசி, நெல், சர்க்கரை உள்ளிட்ட சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.

  தற்போது மானாமதுரையிலிருந்து கரி மூட்டைகள் மட்டுமே சரக்கு ரயிலில் அனுப்பப்படுகின்றன. சரக்குகளை அடுக்கி வைப்பதற்கு இன்னமும் இங்கு குட்ஸ்ஷெட் கட்டப்படவில்லை.

  மானாமதுரை-விருதுநகர் இடையே அகல ரயில்பாதை அமைக்கப்படாததால், தற்போது மானாமதுரை, மதுரை வழியாக சென்னையிலிருந்து நெல்லை, திருவனந்தபுரம், தூத்துக்குடி, தென்காசி, கொல்லம் ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

  இதுபோல், ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதோடு, மானாமதுரையிலிருந்து நேரடியாக மதுரைக்கும் பகல் நேரங்களில் ரயில்கள் விட வேண்டுமென இப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

  மேலும் கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்ட மானாமதுரை வழித்தடத்தில் புவனேஸ்வரம்-ராமேஸ்வரம், கன்னியாகுமரி-ராமேசுவரம் ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. இந்த ரயில்களையும் உடனே இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.