முகப்பு
மதுரை

சின்னாளபட்டி காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் நியமிக்கப்படுவாரா?

திண்டுக்கல், ஏப். 4: சின்னாளபட்டி காவல் நிலையத்திற்குத் தனி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளபட்டியில் 1984-ம் ஆண்டு தனி க

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:23 PM
பகிர்:

திண்டுக்கல், ஏப். 4: சின்னாளபட்டி காவல் நிலையத்திற்குத் தனி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளபட்டியில் 1984-ம் ஆண்டு தனி காவல் நிலையம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்நிலையத்திற்கென தனி ஆய்வாளர் செயல்பட்டு வந்தார். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளரே சின்னாளபட்டி காவல் நிலையத்தையும் கவனித்து வருகிறார்.

சின்னாளபட்டி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கோயில் திருவிழா மற்றும் விசேஷ நாள்களில் பிரச்னைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அம்பாத்துரை காவல் நிலையத்திற்குச் சென்று வரும் நிலை உள்ளது.

Advertisement

இங்கு பணியாற்றிய 6 தலைமைக் காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதால் ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது. எனவே காவல் நிலையத்திற்குப் போதிய காவலர்களும், ஆய்வாளரும் நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.முத்துச்சாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

2001-ம் ஆண்டுக்கு முன் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்புப் பிரிவு காவல் பணியை துணை கண்காணிப்பாளர்களே கவனித்து வந்தனர். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு இப் பணியை ஆய்வாளர்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.

இந் நிலையில், பெரிய அளவில் குற்றம் நிகழ்ந்திராத மற்றும் சார்பு ஆய்வாளரே நிலையத்தை நிர்வகிக்கும் நிலையில் உள்ள சிறிய காவல் நிலையங்களில் இருந்த ஆய்வாளர்கள் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சிறப்புப் பிரிவுப் பணிக்கு மாறுதல் செய்யப்பட்டனர்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி, பழனி அடிவாரம், குஜிலியம்பாறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வாளர்களுக்குப் பதிலாக சார்பு ஆய்வாளர்கள் நிலையத்தை நிர்வகித்து வருகின்றனர்.

அருகில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர் இதுபோன்ற காவல் நிலையங்களின் பொறுப்பு ஆய்வாளராகவும் கவனித்து வருகிறார். மேலும் சின்னாளபட்டி காவல் நிலையத்தில் உள்ள தலைமைக் காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு செய்யப்பட்டனரே தவிர அவர்கள் அந்த நிலையத்திலேயே தொடர்ந்து தலைமைக் காவலருக்கான பணியை செய்து வருகின்றனர்.

25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் வகையில் தான் சிறப்பு ஆய்வாளராக அரசு தரம் உயர்த்தி உள்ளது. சின்னாளபட்டி போன்ற சிறிய காவல் நிலையங்களுக்குப் போதுமான அளவில் காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.முத்துச்சாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments