திண்டுக்கல் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு எப்போது?
திண்டுக்கல், ஏப். 13: தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னை உள்ள மாவட்டங்களில் முன்னோடி மாவட்டமாக இருப்பதில் திண்டுக்கல்லும் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்னரே வாரக் கணக்கில் குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்த
திண்டுக்கல், ஏப். 13: தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னை உள்ள மாவட்டங்களில் முன்னோடி மாவட்டமாக இருப்பதில் திண்டுக்கல்லும் ஒன்று.
பல ஆண்டுகளுக்கு முன்னரே வாரக் கணக்கில் குடிநீர் விநியோகம் இல்லாமல் இருந்துவரும் நிலையிலும் அதை தாங்கிக்கொள்ளும் நிலையைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் இந்நகர மக்கள்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஆத்தூர் பகுதியில் இயற்கையாக மூன்று புறம் மலைகளை அரணாகக் கொண்ட பகுதியில் விழும் நீரை சேமித்து அணையாக கட்டினால் திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் காமராஜர்சாகர் அணையைக் கட்டினார்.
Advertisement
பல ஆண்டுகளாகவே திண்டுக்கல், சின்னாளபட்டி, வழிநடை கிராமங்களின் நீர்த்தேவையை இந்த அணையே பூர்த்தி செய்து வந்தது. அணையில் தேங்கும் சேற்றினை அகற்றும் தொழில்நுட்பம் தெரியாததாலும் நீரின் கொள்ளளவு குறைந்து, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விநியோகம் இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இதனால் பேரணையிலிருந்து திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. வைகையில் தண்ணீர் திறந்து விடப்படாததால் பேரணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
தற்போது காமராஜர்சாகர் அணையில் சுமார் 15 அடி நீர் உள்ளது. இங்கிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. காவிரியின் மூலம் தினமும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் நகரின் தேவையோ நாளொன்றுக்கு 190 லட்சம் லிட்டர். 60 லட்சம் லிட்டர் பற்றாக்குறை தினமும் இருந்து வருகிறது.
மின்வெட்டு காரணமாக தண்ணீர் பம்ப் செய்வதிலும், சுத்திகரிப்பு செய்வதிலும் சிரமங்கள் உருவாகி உள்ளன.
இதனால் 8 முதல் 12 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
காமராஜர்சாகர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதானாலும் விநியோகம் செய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சிறிது சிறிதாக புதிய பகிர்மான குழாய் பதிக்கும் பணியையும் நகராட்சி மேற்கொண்டு வருகிறது.
திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக வைகை அணையிலிருந்து நேரடியாக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அரசு பரிசீலனையில் உள்ளது.
காமராஜர்சாகர் அணையில் உள்ள சேற்றினை நீக்கி, அணையின் மேடான பகுதிகளை கரைப்பதன் மூலம் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகப்படுத்த முடியும்.
இவ்வாறு செய்யும்போது காமராஜர் சாகர் அணையின் நீரைக் கொண்டே நகரின் குடிநீர்த் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்துவிட முடியும். இப் பணிக்கு நகராட்சி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது நகர மக்களின் விருப்பம் ஆகும்.