மூன்றாண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத இணையதளப் பிரிவு: அறிவுப் பெட்டகத்தில் வீணாகும் ரூ.4 லட்சம் அரசு நிதி
மதுரை, ஆக. 4: மதுரை மாவட்ட மைய நூலகத்தில் இணையதளப் பிரிவு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், ரூ. 4.09 லட்சம் அரசுப் பணம் வீணாகி வருவதாக, நூலக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தனிமன
மதுரை, ஆக. 4: மதுரை மாவட்ட மைய நூலகத்தில் இணையதளப் பிரிவு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், ரூ. 4.09 லட்சம் அரசுப் பணம் வீணாகி வருவதாக, நூலக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தனிமனிதனின் மேம்பாட்டுக்கு புத்தக வாசிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது. அதனால்தான் நூலகங்களை நகர்ப்புறம் மட்டுமின்றி ஊர்ப்புறங்களிலும்,
குக்கிராமங்களிலும் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரையில் 1952-ம் ஆண்டு சிம்மக்கல்லில் தொடங்கப்பட்ட மாவட்ட மைய நூலகம் 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. தென் மாவட்ட
அளவில் பெரிய அரசு நூலகமாக விளங்கும் இந்த நூலக வளாகத்தில், மாவட்ட
நூலக ஆணைக் குழுவும் செயல்பட்டு வருகிறது.
இங்கு, கதை, கவிதை, கட்டுரை, ஆன்மிகம், இலக்கியம், வரலாறு,
போட்டித் தேர்வு ஆகியவற்றுக்கென 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
தினமும், நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து புத்தகம், பத்திரிகை பார்த்துச் செல்கின்றனர். மேலும், இந்த நூலகத்துக்கு ஏராளமான உறுப்பினர்கள் உள்ளதால், பலர் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றும் வாசித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களும், பட்டதாரி இளைஞர்களும் போட்டித் தேர்வுகளுக்காக நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள குறிப்புதவிப் பிரிவைப் பயன்படுத்தி வருகின்றனர். பெண்களும் அதிகளவில் இங்கு வந்து படிக்கின்றனர்.
மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இணையதளத்தைப் பயன்படுத்தி நூல்களைப் படிக்கும் வசதிக்காக, சில ஆண்டுகளுக்கு முன் இந்த நூலகத்தில் இணையதளப் பிரிவை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த த. உதயச்சந்திரன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக, மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதியிலிருந்து (2005-2006-ம் ஆண்டு) ரூ. 4.09 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நூலகத்தின் நுழைவுப் பகுதியிலுள்ள அறையின் வலப் பக்கத்திலேயே குளிரூட்டப்பட்ட தனி கண்ணாடி அறையும் உருவாக்கப்பட்டது. இதற்காக, கணினி கருவிகள், இருக்கைகள், மேஜைகள் ஆகியவையும் வாங்கப்பட்டன.
இந்நிலையில், பணிகள் தொடங்கியது முதல் தற்போது முடிவடைந்த நிலை வரை
ஏறக்குறைய 3 ஆண்டுகளாகியும் இந்த இணையதளப் பிரிவு பயன்பாட்டுக்கு வரவில்லை.
அதேபோன்று, அப்போதைய ஆட்சியர் உதயச்சந்திரனுக்குப் பிறகு, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பெ. சீத்தாராமன், எஸ்.எஸ். ஜவஹர், என். மதிவாணன் என பலரும் பணியாற்றிச் சென்றுவிட்டனர். ஆனால், நூலகத்தின் இணையதளப் பிரிவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இணையதளப் பிரிவு திறப்பதற்கு தாமதமாகி வருவதால், நூலகத்துக்கு வருவோர் இந்த அறையை காட்சிப் பொருளாக வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.
மேலும், இந்த இணையதளப் பிரிவுக்காக வாங்கப்பட்ட கணினி கருவிகளும் தற்போது முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறதா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.
இதற்கான காரணத்தை நூலக வட்டாரத்தில் விசாரித்தபோது, இணையதளப் பிரிவில் ஏ.சி. பொருத்தப்பட்டிருப்பதால் தனி மின் இணைப்பு அளிக்க வேண்டும் என்றும், மின் வாரியத்தினர் இந்த விஷயத்தில் தாமதப்படுத்தி வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இப்பிரிவு பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதால், அரசு பணம் ரூ. 4.09 லட்சம் வீணாகி வருவதை நூலக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நூலகமானது அறிவுப் பெட்டகம் என்று போற்றப்படுவதுண்டு. "உடை, உணவு என்பது மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்றாலும் கூட முதல் இடம் தரப்பட வேண்டியது புத்தக சாலைக்குத்தான்' என்று பேரறிஞர் அண்ணா கூறுவார்.
ஆசியாவிலேயே 3 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் ரூ. 200 கோடியில் சென்னை கோட்டூர்புரத்தில் பிரம்மாண்ட நூலகத்தை கட்டுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமையாகக் கூறிவரும் வேளையில், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை மைய நூலகத்தின் இணையதளப் பிரிவைத் திறக்கவும் நடவடிக்கை எடுப்பாரா?