வீணாகும் விளையாட்டு உபகரணங்கள்
திண்டுக்கல், ஆக. 28: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பித்தளைப்பட்டி ஊராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் மைதானத்தில் இ
திண்டுக்கல், ஆக. 28: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பித்தளைப்பட்டி ஊராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் மைதானத்தில் இல்லாமல் ஊராட்சி அலுவலகத்திலும், இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மயானம் பராமரிப்பு இன்றி முள் புதர் மண்டியும் காணப்படுகிறது.
கிராமங்களில் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்களை வழங்கி திறனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத் தவிர விளையாட்டு மைதானங்களை பராமரிக்க ஆண்டுதோறும் | 10 ஆயிரத்தை பராமரிப்புத் தொகையாகவும் வழங்கி வருகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகிறது.
Advertisement
இந் நிலையில், பித்தளைபட்டி ஊராட்சியில் மைதானத்தில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் ஊராட்சி அலுவலகத்தில் முடங்கி உள்ளது. இந்த உபகரணங்களை மைதானத்தில் பொருத்துமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவியர் வற்புறுத்தி உள்ளனர். இருப்பினும் பணிகள் நடைபெறாமல் உள்ளது எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி மயான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனுமந்தராயன் கோட்டை சாலையில் கட்டப்பட்டுள்ள மயானம் பராமரிப்பு இன்றி முள்புதர் மண்டி உள்ளது. | 2 லட்சம் செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மயான மேம்பாடு செய்தும், பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பித்தளைப்பட்டி ஊராட்சி மக்களின் கோரிக்கை ஆகும்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.அருண்மணியிடம் கேட்டபோது அவர் கூறியது:
விளையாட்டு மேம்பாட்டிற்கான உபகரணங்களைப் பராமரிக்க ஊராட்சிக்கு அரசு | 10 ஆயிரம் நிதி வழங்கி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளில் 60 ஊராட்சி விளையாட்டு மைதானங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 246 விளையாட்டு மைதானங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை ஒட்டி விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி அளவில் நடத்தப்படும். செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அனைத்து விளையாட்டு மைதானங்களும் தயாராகிவிடும்.
மயானங்களை அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் தங்களது பொது நிதியில் இருந்து மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற குறைகள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம மயானங்களை உடனே பார்வையிட்டு குறைந்தபட்ச செயல்பாட்டு அளவிற்காவது மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திட்ட இயக்குநர்.